search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒரு நாடு ஒரே தேர்தல்"

    அரசியல் கட்சிகள் இனி இரவு 10 மணி வரை ஒலிபெருக்கி பிரசாரம் செய்யலாம் என்று தேர்தல் கமி‌ஷன் அனுமதித்துள்ளது. #SimultaneousElections #ElectionCommission

    புதுடெல்லி:

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலின் போது ஒலி பெருக்கியை பயன்படுத்தி பிரசாரம் செய்வதற்கு தேர்தல் கமி‌ஷன் கடும் கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது.

    இரவு 10 மணிவரை ஒலி பெருக்கி பிரசாரம் செய்வதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை மட்டுமே ஒலி பெருக்கி மூலம் பிரசாரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் கட்டுப்பாடு விதித்து இருந்தது.

    இந்த நிலையில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரசாரத்துக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். குறிப்பாக இரவு 10 மணிவரை ஒலிபெருக்கி பிரசாரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    டெல்லியில் நடந்த தேர்தல் கமி‌ஷன் ஆலோசனைக் கூட்டத்திலும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கோரிக்கையை பல நேரத்தில் வலியுறுத்தினர்.

    இதுபற்றி தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி பரிசீலித்து வந்தனர். இதையடுத்து அரசியல் கட்சிகள் கோரிக்கையை எற்று ஒலிபெருக்கி பிரசார நேரத்தை அதிகரித்து அனுமதி அளித்துள்ளது.

    இதுபற்றி டெல்லியில் தேர்தல் கமி‌ஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    அரசியல் கட்சி பிரதிநிதிகள் கோரிக்கையை தேர்தல் கமி‌ஷன் பரிசீலித்து ஒலிபெருக்கி பிரசார கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இனி இரவு 10 மணி வரை ஒலிபெருக்கி பிரசாரம் செய்யலாம் என்று அனுமதித்துள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் பிறப்பித்தது. முந்தைய உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #SimultaneousElections #ElectionCommission

    உரிய சட்ட திருத்தம் செய்யாதவரை நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் தெரிவித்தார். #SimultaneousElections #ElectionCommission
    புதுடெல்லி:

    ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவதன் மூலம் தேர்தல் செலவை கணிசமாக மிச்சப்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.

    இது தொடர்பாக கடந்த மே மாதம் 16-ந்தேதி மத்திய சட்ட ஆணையத்துடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. அப்போது, இதுபோல் தேர்தலை நடத்த முடிவு செய்தால் கூடுதலாக 12 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், இதே அளவில் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் தேவைப்படும் எனவும், இதற்காக ரூ.4,500 கோடி செலவு பிடிக்கும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்தது.



    இந்த நிலையில், மத்திய சட்ட ஆணையத்துக்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று முன்தினம் எழுதிய கடிதத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

    இதுபற்றி டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத்திடம் விரைவில், நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்படுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற கோரிக்கை தொடர்பாக 2015-ம் ஆண்டு முதலே இதற்காக தேவைப்படும் 100 சதவீத ஒப்புகைச் சீட்டு எந்திரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து தேர்தல் கமிஷன் தனது கருத்தை தெரிவித்து வருகிறது. இதர தேவைகளான கூடுதல் போலீஸ் படை, தேர்தல் அதிகாரிகள் நியமனம் பற்றியும் தெரிவித்து உள்ளது.

    மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்பதைப் பொறுத்தவரை சில மாநிலங்களின் சட்டசபை ஆயுட்காலத்தை குறைக்கவும் சில மாநிலங்களின் சட்டசபைகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவேண்டியும் இருக்கும். இதற்கு உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமாகும்.

    இதுபோன்ற நிலையில் உரிய சட்ட திருத்தங்கள் செய்யாத வரை ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை. அதேநேரம் பதவி காலம் முடியும் சட்டசபைகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்தவேண்டிய பொறுப்பு தேர்தல் கமிஷனுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #SimultaneousElections #ElectionCommission
    பாராளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்ட சபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமி‌ஷன் தயாராகி வருகிறது. #SimultaneousElections #ElectionCommission

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கும் மாநில சட்டசபைகளுக்கும் தனி தனியாக தேர்தல் நடத்துவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது.

    இந்த செலவை குறைத்தால் மீதமாகும் பணத்தை பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு செலவிட முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.

    இதையடுத்து “ஒரு தேசம் ஒரு தேர்தல்” என்ற கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கூறி வருகிறது. அதன் பரிந்துரையை ஏற்று சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம் மிகப்பெரிய ஆய்வை நடத்தியது. அதில் ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தினால் கூடுதலாக எத்தனை லட்சம் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் தேவைப்படும் என்ற கணக்கீடு செய்யப்பட்டது.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இருந்து “ஒரு தேசம், ஒரு தேர்தல்” திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்று தேர்தல் கமி‌ஷன் கூறியது. ஆனால் இந்த திட்டத்தை இதுவரை பெரும்பாலான கட்சிகள் ஏற்கவில்லை. இதனால் ஒரே நேரத்தில் தேர்தல் திட்டத்துக்கு இது வரை ஒருமித்த கருத்து உருவாகவில்லை.


    இந்த நிலையில் பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஜூன் மாதம் 3-ந்தேதியுடன் பதவிக் காலம் முடிவதால் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமி‌ஷன் தயாராகி வருகிறது. ஆனால் அந்த தேர்தலுக்கு முன்னதாக வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பதவிக் காலம் முடிய உள்ள மிசோராம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டியதுள்ளது.

    இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, தெலுங்கானா, அருணா சலபிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தல் முடிந்த அடுத்த 6 மாதத்தில் அரியானா, ஜார்க்கண்ட், மராட்டியம் ஆகிய 3 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரை 11 மாதங்களில் 12 மாநிலங்களுக்கு 3 கட்டமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் இந்த செலவை குறைக்க பாராளுமன்ற தேர்தலுடன் 11 மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று பாரதிய ஜனதா கட்சி பரிந்துரைத்துள்ளது.

    “ஒரு தேசம் ஒரு தேர்தல்” திட்டத்தின் முதல்படியாக பாராளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தி விட வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையமும் பாராளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்ட சபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தன்னை தயார்படுத்தி வருகிறது.

    இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ள மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் இப்போதே பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் தொடங்கி விட்டனர். பாராளுமன்ற தேர்தலுடன் இந்த 4 மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்த வேண்டுமானால் இந்த 4 மாநிலங்களிலும் டிசம்பர் மாதத்துக்கு பிறகு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டியதிருக்கும்.


    அது போல அரியானா, ஜார்க்கண்ட், மராட்டியம் ஆகிய 3 மாநிலங்களிலும் 6 மாதத்துக்கு முன்பே ஆட்சியை கலைத்து விட்டு, முன்பே தேர்தல் நடத்த வேண்டும். இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி நடப்பதால், முன் கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு வசதியாக எளிதில் ஆட்சியை கலைக்க முடியும்.

    ஆனால் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்துக்கு இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை.

    இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா, சிக்கிம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்யத் தொடங்கியுள்ளது. இதற்காக 17 லட்சத்து 40 ஆயிரம் மின்னணு எந்திரங்களுக்கு தேர்தல் ஆணையம் ஆர்டர் கொடுத்துள்ளது. இன்னும் 3 மாதங்களில் அவை தயாராகி வந்து விடும்.

    பாராளுமன்றத்துக்கும் அனைத்து மாநில சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் சுமார் 80 லட்சம் எந்திரங்கள் தேவைப்படும். 11 மாநில சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமானால் சிறிதளவு கூடுதல் எந்திரங்களை வர வழைத்து ஓட்டுப்பதிவை நடத்தி விட முடியும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    ஆனால் இவையெல்லாம் பரிந்துரை செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளன. அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த மனதுடன் முன் வந்தால் மட்டுமே “ஒரு தேசம் ஒரு தேர்தல்” திட்டம் வெற்றி பெறும்.

    பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி தங்கள் கருத்துக்களை மத்திய சட்ட ஆணையத்திடம் பதிவு செய்தனர். #SimultaneousElections #Congress

    புதுடெல்லி:

    தேர்தல் செலவினங்களை குறைக்கவும், அடிக்கடி தேர்தல் நடைபெறுவதை தவிர்க்கவும் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாமா என்று மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

    இதற்கு தேர்தல் கமி‌ஷன் வரவேற்பு தெரிவித்ததுடன் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார் என்று அறிவித்தது. இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறது.

    இதற்கிடையே மத்திய சட்ட கமி‌ஷனும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமா? இதில் உள்ள இடர்பாடுகள் என்ன என்பது குறித்தும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி கருத்து கேட்டது. இதில் கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் சார்பில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி கருத்துக்களை தெரிவிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ப.சிதம்பரம், கபில்சிபல், அபிஷேக் சிங்வி, ஆனந்த் சர்மா, ஜெ.டி.சீலம் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.


    இந்த குழு ஆலோசனை நடத்தியதில் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் டெல்லியில் சட்ட கமி‌ஷனை நேரில் சந்தித்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது இந்திய கூட்டாட்சி தத்துவத்துக்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது. எனவே காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

    பா.ஜனதா சார்பில் கருத்துக்களை தெரிவிக்க மேலும் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கூட்டணி கட்சிகளிடையேயும் இதில் கருத்து வேறுபாடு உள்ளது. அகாலி தளம் மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    அ.தி.மு.க. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்தாலும் 2025-ம் ஆண்டில் இருந்து இதை அமல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தி.மு.க., தெலுங்கு தேசம், இடது சாரிகள், ஜெ.டி.எஸ். ஆகிய கட்சிகள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி ஆகியவற்றுக்கான தேர்தல் ஒரே நேரத்தில் நடக்கலாம் என்று மேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் இல.கணேசன் எம்.பி. கூறினார். #OneNationOneElection
    மேலூர்:

    மதுரை மாவட்டம், மேலூரில் இன்று பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட இல. கணேசன் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி ஆகியவற்றுக்கான தேர்தல் ஒரே நேரத்தில் நடக்கலாம். அதற்கான கட்சிப்பணிகளை மேலூரில் இருந்து தொடங்கி உள்ளோம்.

    பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என டி.டி.வி தினகரன் கருத்து கூறியுள்ளார். ஆனால் ஏற்கனவே அமித்ஷா ஊழல்வாதிகளுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்து விட்டார்.

    காவிரி பிரச்சனைக்காக போராடியவர்கள் இன்று யாரேனும் வயல்வெளியில் இறங்கி விவசாய பணிகளை செய்தார்களா? என்பது தான் தற்போதைய கேள்வி.

    பொய் வதந்தி மூலம் குழந்தை திருட வந்ததாக, சில அப்பாவி மக்கள் தற்போது கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இது இந்த தேசத்தின் மீது குற்றச்சாட்டை பரப்ப வேண்டும் என்று சிலர் செய்யும் பிரசாரம் ஆகும்.


    ஸ்டெர்லைட் ஆலை மூலம் அந்தப்பகுதி மாசடைந்துள்ளதாக சுற்றுச்சூழல் துறை மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளது.

    இதேபோல சேலம் தோல் தொழிற்சாலை, திருப்பூர் உள்ளிட்ட சாயப்பட்டறை செயல்படும் பகுதிகளிலும் நிலத்தடி தண்ணீர் மாசடைந்தது உண்மை. இதனை ஆய்வு செய்ய வேண்டும்.

    தூத்துக்குடி சம்பவம் போல், சேலம் பகுதியில் நடைபெறாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காவிரி நீர் கடலில் கலந்து வீணாவதை அரசு தடுக்க வேண்டும். இதற்காக தஞ்சை பகுதிகளிலுள்ள ஏரி, குளங்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.

    கவர்னர் பதவி என்பது திரையரங்கில் உள்ள தீ தடுப்பு வாளி போன்றது. கவர்னர் ஆய்வை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. பொது மக்கள் ஆதரிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #LaGanesan  #OneNationOneElection
    பாராளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ரூ.5 ஆயிரம் கோடி செலவாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. #SimultaneousElections #ElectionCommission

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) தேர்தல் நடத்தப்படும் போது மாநில சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த மத்தியில் ஆளும் பா.ஜ.க. விரும்புகிறது.

    இது தொடர்பாக மத்திய சட்ட ஆணையம் கடந்த வாரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டது. அப்போது 4 கட்சிகள் மட்டுமே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன. 11 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்த நிலையில் சட்ட ஆணையத்துக்கு தலைமை தேர்தல் ஆணையமும் பதில் அளித்துள்ளது. அதில் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட என்னென்ன செய்ய வேண்டும், எவ்வளவு செலவாகும் என்பன போன்ற விபரங்கள் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக ஓட்டுப்பதிவு நடத்த ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 2 மடங்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி அதிகாரிகள், ஊழியர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க கால அவகாசம் தேவைப்படும். அதற்கும் கணிசமான தொகை செலவாகும்.

     


    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் கூடுதலாக பல லட்சம் எந்திரங்கள் வாங்கப்பட வேண்டும். அப்படி கூடுதலாக மின்னணு எந்திரங்கள் வாங்குவதற்கு மட்டும் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தனது பதிலில் சுட்டிக்காட்டியுள்ளது.

    பொதுவாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை 3 தேர்தலுக்குத்தான் பயன்படுத்த முடியும். அதன் பிறகு புதிய எந்திரங்கள் வாங்க வேண்டும். எனவே 15 ஆண்டுகளுக்கு ஒரு தடவை எந்திரங்களுக்கே சில ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்.

    மேலும் வரும் ஆண்டுகளில் ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. எனவே மின்னணு எந்திரங்கள் தேவை அதிகரிக்கும். அதற்கும் கூடுதல் செலவாகும்.

    2024-ம் ஆண்டு தேர்தலின் போது மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக கூடுதலாக 12 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்க வேண்டியதிருக்கும். அப்போது மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் வாங்குவதற்கே சுமார் ரூ.14 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று சட்ட ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பாராளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. #OneNationOneElection #DMK
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கும் சட்ட மன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை மத்திய சட்டத்துறை கேட்டு வருகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இதுபற்றி டெல்லியில் சட்ட ஆணையத்தின் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற திருச்சி சிவா எம்.பி. கூறியதாவது:-

    ஒரே நேரத்தில் தேர்தல் என்பது கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் நோக்கத்தில் உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் ரூ.10 ஆயிரம் கோடி செலவு ஏற்படும். எனவே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம் ஆகாது. இதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #OneNationOneElection #DMK
    நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு 2024-ம் ஆண்டு ஒன்றாக தேர்தல் நடத்தினால் ஏற்றுக்கொள்வோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
    சென்னை:

    இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே என்ன நிலைப்பாடு எடுத்து இருந்தாரோ? அதே நிலைப்பாட்டில் தான் நாங்களும் உள்ளோம். ஆனால், தமிழகத்தின் சட்டமன்ற பதவிக்காலம் 2021 வரை இருக்கிறது. எனவே அதை இப்போதைய நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்க்க வேண்டாம்.

    ஆனால் 2024-ம் ஆண்டு ஒன்றாக சேர்த்து தேர்தல் நடத்தினால் ஏற்றுக் கொள்கிறோம். நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது வரவேற்க வேண்டிய விஷயம் என்றாலும், எங்களுக்கு சட்டமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தக்கூடாது என்ற கருத்தை தான் கடிதம் மூலம் தெரிவித்து இருக்கிறோம். தலைமை கழக நிர்வாகிகள் டெல்லி சென்று இருக்கிறார்கள். அவர்களும் சொல்வார்கள்.

    மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சினிமாவில் எப்போதும் சமுதாயத்துக்கு நல்ல விஷயங்களை கொடுத்தவர். அதே போன்று நடிகர்கள், திரைப்படத்துறையினர், இயக்குனர்கள், டைரக்டர்கள் சமுதாயத்துக்கு நல்ல விஷயங்களை கொடுக்காமல், வெறும் லாபநோக்கத்தோடு, பணம் போட்டு முதலீடு செய்கிறோம், நாம் சம்பாதிக்க வேண்டும் சமுதாயம் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்று இருக்கக்கூடாது.

    புகை பிடித்தல் உடல்நலத்துக்கு கேடு. எனவே, புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகள் சினிமாவில் இருப்பது சமுதாயத்துக்கு சீர்கேடாக அமைகிறது. ஆகவே, சினிமாவில் அத்தகைய காட்சிகள் இல்லாமலும், நடிகர்கள் அந்த காட்சிகளில் நடிக்காமல் இருந்தாலும் நிச்சயமாக அது சமுதாயத்துக்கு செய்யும் உதவியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாராளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தலையும் ஒரே சமயத்தில் நடத்துவது சாத்தியமா? என்பது குறித்து அரசியல் கட்சிகளிடம் சட்ட ஆணையம் இன்று கருத்துக்களை கேட்க உள்ளது. #OneNationOneElection #LawCommission
    புதுடெல்லி :

    நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு காய்நகர்த்தி வருகிறது.
    மத்திய சட்ட ஆணையமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

    அதாவது, 2021-ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும், மற்ற மாநிலங்களில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் சிபாரிசு செய்துள்ளது.

    இதை நடைமுறைப்படுத்த சில மாநில சட்டசபைகளின் பதவிக்காலத்தை குறைக்க வேண்டி இருக்கும். வேறு சில மாநிலங்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டி இருக்கும். இதற்காக அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.



    இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் முடிவு செய்தது. அதன்படி டெல்லியில், இன்றும் நாளையும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

    இக்கூட்டம் டெல்லி கான்மார்க்கெட்டில் உள்ள லோக்நாயக் பவனில் நடைபெற உள்ளது. முதல் நாள் கூட்டத்தில் முக்கிய அரசியல் கட்சித்தலைவர்களின் தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைக்க உள்ளனர்.  அதிமுக சார்பில், மக்களவை துணை சபாநாயகர் மு. தம்பிதுரை, அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் பி.வேணுகோபால், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அதிமுகவின் நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளனர்.  #OneNationOneElection #LawCommission
    ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அ.தி.மு.க. தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
    சென்னை:

    பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் நாளை சட்ட ஆணைய கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழக அரசின் சார்பில் துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சட்ட ஆணையத்திற்கு கடந்த மாதம் 29-ம் தேதி கடிதம் எழுதி உள்ளனர்.

    அதில், தற்போதைய சட்டமன்றத்தின் ஆயுள் காலத்தை குறைக்கும் வகையில் எந்த மாற்றமும் கொண்டு வரக்கூடாது என கூறப்பட்டுள்ளது. #OneNationOneElection
    ×